அமெரிக்க நடைமுறைகள்(2)
என் புதிய அமெரிக்கா வாசம் பற்றிநேற்று நான் பதிவிட்ட இழை யை தொடர்ந்து அதில் விட்டு போன சில விவரங்கள் இதோ..
தண்ணீர்:
இங்கு தண்ணீர் தட்டுப்பாடு அறவே இல்லை. நான் வசிக்கும் மாநிலம் ஏரிகளால் ஆனது. நிலத்தடி நீர்வளம் நிறைந்த பகுதி. ஆனால் அரசு மக்களை நீர் சேமிப்பு நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பல முயற்சிகள் எடுக்கிறது. குழாய் நீர் குடிக்கும் அளவுக்கு மிக தரமானதாக இருக்கிறது. இருந்தாலும் மொத்த விலைகடையில் மினரல் வாட்டர் பாட்டில்களை (30-40 பாட்டில் ஒரு பாக்கட்) வாங்கி செல்கிறார்கள். அவை நிறம் சுவை சேர்த்தும் கிடைக்கிறது. விலை 3$ .
கடைகள் : இங்கு கடைகளில் ஒரு ஆச்சரியமான விஷயம் கண்டேன். நாம் ஒரு பொருள் வாங்கி பயன்படுத்தி ஒருவேளை நமக்கு அது பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் ரசீதொடு திருப்பி தந்துவிட்டால் முழு பணம் திருப்பி தரப்படும். இது பொதுவில் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க படுகிறது. உடைகள் உட்பட.
சரி எல்லாமே விலை அதிகம் தானா மலிவு விலை பொருட்களே கிடைக்காதா என்றால் கிடைக்கிறது.டாலர் டிரீ எனப்படும் ஒரு டாலர் கடைகளில். நம் ஊர் எது எடு 10 ரூபாய் பொல் இங்கே எது எடுத்தாலும் 1 டாலர் தான். அதனால் அந்த கடைகளை மலிவாக எண்ணி விட வேண்டாம். சூப்பர் மார்க்கெட் பொல் பிரும்மாண்டம்.
இங்கே செராமிக் தட்டுகள் (சுமாரான தரத்தில்) கரண்டிகள் , சமையலறை உபயோக பொருட்கள், டஸ்ட்பின், இந்த ஊர் நீள துடைப்பம், தரம் சுமாரான சோப், காபி கப்புகள், கண்ணாடி பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், விளையாட்டு பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் (பெரிய பட்டியல்) என பலவும் கிடைக்கிறது.
இந்த கடைகள் மின்னசொட்டா என்று இல்லை இந்த நாடு முழுவதும் கிளைகள் கொண்டு இயங்குகிறது. இங்கே எந்த ஊர் சென்றாலும் (நான் 2 வாரங்கள் முன்பு வர்ஜீனியா சென்று இருந்தேன்) அங்கு ஒரு வால்மார்ட், ஒரு costco ஒரு டாலர் டிரீ என இதே கடைகள் வணிகச் சங்கிலிகளாக வியாபித்திருக்கும்.
இதில் இன்னுமோர் சுவாரஸ்ய தகவல் சொல்லவா. பொதுவில் இதுபோன்ற கடைகளில் எல்லாமே கிடைக்கும். அதனால் இங்கிருக்கும் உள்ளூர் சிறு தொழிலை இவை பாதிக்காத வண்ணம் அந்த ஊரில் புதிதாக கடை தொடங்கும் போது உள்ளூர் வியாபாரிகள் விற்கும் எந்த பொருளும் (அல்லது அதற்கு நிகரான) இங்க விற்க அனுமதிப்பதில்லை.
கேட்கவே நன்றாக இருக்கிறது இல்லையா.. பெரிய கடைகள் வந்து நம் ஊர் சிறு மளிகை கடைகள், சிறு சிறு நகைக்கடைகள், ஜவுளிக்கடை க எத்தனை நசித்து போய் இருக்கின்றன. இங்கே ஒரு பெயிண்ட் கடை இருந்தால் அந்த ஊர் வால்மார்ட் இல் பெயிண்ட் விற்க மாட்டார்கள். ஹார்டுவேர், பொக்கே கடை எல்லாம் அப்படியே.
கடைகள் பத்தி நிறைய சொல்லிவிட்டேன்.. இப்போது கல்வி இங்கு பிள்ளைகள் பள்ளி சேரும் முன் ‘early education screening’ என்ற ஒரு சோதனைக்கு உட்படுத்த படுகிறார்கள். என் மகள்களை அழைத்து சென்ற போது எனை பல விதத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் இது.
இதற்கு முன் அனுமதி பெற்று அந்த குறிப்பிட்ட நாள்/நேரத்தில் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நம் பிள்ளைகளோடு செலவழித்து அவர்கள் அருகே அமர்ந்து, கேட்கும் திறன் (கருவிகளோடு சோதனை) ,பார்க்கும் திறன், கற்கும் திறன், புரிதல் எப்படி என்று குழந்தை மன நல மருத்துவர் உட்பட பலர் ஆராய்ந்து, முக்கியமாக எந்த விதத்திலும் குழந்தை, நம்மை சோதிக்கிறார்கள் என உணராத படி நடந்து அறிக்கை தருகிறார்கள். இதில் கல்விக்கும் இந்த சோதனைக்கும் எந்த கட்டணமும் இல்லை. ஒரு வேளை இதில் பிள்ளைளுக்கு எதேனும் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்குரிய தனிப்பட்ட கவனிப்பு அந்த
குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவே இந்த முன்னேற்பாடு என பிறகு கேட்டு அறிந்தோம். பள்ளி செல்ல பஸ் வசதி அரசே செய்து தருகிறது. அதற்கென்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி துறை இயங்குகிறது.
பள்ளி முதல் நாள் தொடங்கும் முன்னரே ஒரு நாள் பிள்ளைகளை வரச்சொல்லி பெற்றோர் பிள்ளைகள் அனைவரும் அந்த ஆண்டு சொல்லித் தரப்போகும் ஆசிரியரோடு அறிமுகம் செய்கிறார்கள். அடிப்படை கல்வி நம் ஊர் தரத்தை விட குறைவு தான். பெரிய அளவில் எதுவும் இல்லை. சற்றே ஏமாற்றம் தந்த விஷயம் இது.
ஆனால் செயல் திறன் கூடும் செயல் கல்வி முறை பயன்படுத்த படுகிறது (மாண்டசரி பள்ளிகள் பொல்).மொழி கல்வி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் சொல்லித் தருகிறார்கள். தவிர வாரம் ஒரு முறை (!!!) கணிதம், வரைதல், பாட்டு, விளையாட்டு என்று ஜாலி வகுப்புகள் தான். (தமிழ் பள்ளி சனிகிழமை (நான் தான் டீச்சர் )
இன்று இதோடு நிறுத்தி கொள்கிறேன்.. நாளை நிலப்பரப்பு, வானிலை பற்றி சொல்கிறேன்
Comments
Post a Comment