Banning State park விவரங்கள்

 போன ஞாயிற்றுக்கிழமை banning State park சென்று இருந்தோம். புகைப்படங்கள் பகிர்ந்து இருந்தேன். அதை பற்றி சில விவரங்கள் .

இங்கு இலையுதிர் காலம் மிக அழகு. நாங்கள் இருக்கும் இடத்தை விட இன்னும் சற்று வடக்கே நதிக்கரை ஓரமாக மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காட்சிகள் மிக அழகு (fall colours) என்று கேள்விபட்டு அங்கு சென்றோம். தனியாக அல்ல 18 பேர் கொண்ட குழுவாக இங்கே எந்த பயணம் ஆனாலும் வானிலை அறிக்கை பார்த்து மட்டுமே முடிவெடுக்கிறார்கள். அந்த அளவுக்கு ‘சட்டென்று மாறும் வானிலை’ தான். ஆனால் ஒரு நாளும் அது பொய்ப்பதில்லை. பெய்யென பெய்யும் மழை தான். 5 மணிக்கு மழை என்றால் மழை பெய்தே தீரும்.

அதனால் அந்த வாரக்கடைசி clear and Sunny என்று போட்டிருந்ததால் துணிந்து கிளம்பினோம்.. மக்கள் வருகை அதிகம் இருந்தும் அந்த இடத்தில் சற்றும் இயற்கை பாதிக்க படாமல் இருந்தது. கடைகள் இல்லை.. தண்ணீர் பாட்டில் இல்லை.. சிறு ஒற்றையடி பாதை மட்டுமே.. கரை புரண்டு ஓடிய ஆற்றின் அழகு மட்டுமே.

செல்லும் முன் உணவு ,தண்ணீர், சிறு தீனி என முன்பே எடுத்துக்கொள்வது ஏன் என்று புரிந்தது. வனப்பகுதியில் தொடக்கத்தில் நம்மிடம் ஒரு வரைபடம் தருகிறார்கள். நீள நதிக்கரை ஓரமாக பாதை எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு இருக்கைகள் அவ்வளவு தான். காரை நிறுத்திவிட்டு நடக்கலாம் .

வெயில்(!!!) என்று போட்டிருந்தாலும் குளிர் வாட்டி எடுத்தது. இங்கேயே இருந்து பழகிய மக்கள் இயல்பாய் இருந்தாலும் நாங்கள் தவித்து தான் போனோம். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த குளிரில் எவ்வளவு நடந்தாலும் களைப்பு தெரிவதில்லை. பல கிலோ மீட்டர் நடைக்கு பார்த்தது ஒரு சிறு மரப்பாலம் விர அதை விட சிறிய அருவி. வழியெங்கும் நிறைய மக்கள் தங்கள் பிள்ளைகளோடு, நண்பர்களோடு , வளர்ப்பு நாய்களோடு என எங்களோடு நடந்தனர். ஆச்சரியமாக நம்மூர் கோவில்களில் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வீடு கட்ட வேண்டி கொள்வார்கள் இல்லையா அதே போல் இங்கும் நடக்கிறது படம் இதோ

அடுக்கிய பிறகு அந்த பெண்ணிடம் பேசினேன். கல் வைத்தால் சொந்தமாய் வீடு அமையும் என்றார். தான் தொழியோடும் வளர்ப்பு நாயோடும் வந்திருந்தார்.. செல்ல பிராணிகளை இங்கு சொந்த பிள்ளைகள் போல் நடத்துகிறார்கள். குறிப்பாக நாய் வளர்ப்பவர்கள் அவற்றை தூக்கிக் கொண்டே அலைகிறார்கள். மருத்துவமனை பள்ளி என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

யாரும் பெரிதாய் அதை எண்ணிக்கொள்வதும் இல்லை. கடைகளில் செல்லப் பிராணிகளுக்கு என்று தனி பகுதியே இருக்கிறது. மிக மிருதுவாக இருந்த ஒரு பெரிய தலையணையை வாங்க முற்பட்டு அது பூனைகள் தூங்க என்று கேள்விப்பட்டு அசடு வழிந்து இருக்கிறேன்.

அவைகளுக்கு உடைகள், அழகு நிலையங்கள் என்று பலவும் இங்கே சாதாரணம். மக்கள் பொதுவாக எளிதில் பழக கூடியவர்களாக இருக்கிறார்கள். உதவுவதிலும் அப்படியே. ஒரு பிள்ளை இரு பிள்ளை என்று நிறுத்தாமல் 3 , 4 பெற்றுக்கொள்வது மிக சாதாரணம் இங்கே.

அதில் முக்கியமாக நம்மூர் போல் பெற்றோர் உதவி எதிர்பார்ப்பதில்லை. பிரசவம் முதல், வளர்ப்பு கவனிப்பு என தானே பார்த்து கொள்கிறார்கள். அதற்கான வசதிகளும் இங்கு எராளம். எங்கு சென்றாலும் தள்ளிச் செல்லும் ஸ்டிரோலர் முதல், கார்களில் பிள்ளைகளை பத்திரமாக கட்டி வைக்கும் கார் சீட் வரை எளிதான நடை முறையில் கிடைக்கிறது.

ஆண் பெண் பேதங்கள் அவ்வளவாக இல்லை. பல கடுமையான வேலைகள் பெண்கள் பார்க்கிறார்கள். நம் நாட்டிலும் இதெல்லாம் இருந்தாலும், அங்கு போல் அதை ஆச்சரியமாக பார்க்கும், பாராட்டும் பழக்கம் இங்கு இல்லை. என் மகள் பள்ளி பேருந்து ஓட்டுனர் ஒரு பெண் தான். பெரிய பெரிய லாரியெல்லாம் ஓட்டுகிறார்கள்

இன்று முடித்து கொள்கிறேன். நாளை இங்கு பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கம் , இங்கிருக்கும் சில நடைமுறைகள் பற்றி எழுதுகிறேன். (End)

Comments