அமெரிக்க நடைமுறைகள் (1)

 அன்பு நண்பர்களே, இன்றைய திரியின் விவரங்கள் உபயம் (மொத்தமாக இல்லை, ஒரு 75%) திரு ராம்குமார் அவர்கள் (என் கணவர்)

அமெரிக்க சாலைகள்

அமெரிக்க சாலைகள் பற்றி சொல்லும் முன் நான் பழகியது பார்த்தது சிறிதளவே என்றாலும் எனைக்கவர்ந்த / வியக்கவைத்த இந்த ஊர் நடைமுறைகள் சிலவற்றை சொல்கிறேன்..

இங்கு வந்தது முதல் நான் வியந்து பார்த்தது இந்த நாட்டின் தேசியக் கொடியை.. இதிலென்ன ஆச்சர்யம்? அமெரிக்க கொடி தான் நமக்கு நன்றாக தெரியுமே, புதிதாக அதில் என்ன என்றால், எங்கு திரும்பினாலும், எந்த கட்டிடமானாலும், பல நேரங்களில் வீடுகளில் கூட கம்பீரமாக பறக்கிறது (2)

திரும்பும் திசைகளில் எல்லாம் , வங்கிகள், கடைகள், மருத்துவமனைகள் , மருந்துக் கடை என அனைத்து இடங்களிலும் சின்னதாக எல்லாம் இல்லை.. நன்கு பெரிதாக கீழே விளக்குகள் எல்லாம் வைத்து இரவில் கூட அழகுற ஒளிரும் படி கம்பங்களில் கொடி பறக்கிறது.. இதோ இப்படி..

நாம் எங்கிருக்கிறோம் என்று நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருப்பது போல் இந்தக் கொடிகள் பறக்கின்றன. தேசப்பற்று என்றால் எதிரி நாட்டோடு போரிடுவது, உள்நாட்டு அரசு சரி இல்லையென்றால் அதற்கு எதிராக குரல் கொடுப்பது, நாட்டு வளர்ச்சிக்கு உதவுவது என்று பல வகை.இதில் அமெரிக்கர்கள் தனி வகை .தங்கள் நாட்டை நினைத்து பெருமைப்படும் தேசப்பற்று.. யாராக இருந்தாலும் புன்னகைக்கிறார்கள்.. புதிதா? என்று கேட்கிறார்கள்?

அருமையான ஊர் இது, தங்கமான தேசம் இது நிச்சயமாக உங்களுக்கு பிடித்துவிடும் என்று உறுதி அளிக்கிறார்கள்.ஊடகங்கள் காட்டும் புலம் பெயர் வெறுப்புகள் நடைமுறையில் இல்லை அடுத்தது இந்த வானிலை.. இங்கு கடும் குளிர் என்று முன்பே சொல்லி இருக்கிறேன் அதை இம்மக்கள் எதிர்கொள்ளும் விதம் வியப்பளிக்கிறது. குளிர் என்று ஒதுங்குவதில்லை.மாறாக அதை கொண்டாடுகிறார்கள். பள்ளிகளில் பிள்ளைகள் பனியில் விளையாட அனுமதி உண்டு. அதற்குரிய உடைகளொடு அவர்களை அனுப்ப வேண்டும்

சாலைகள் :

இங்கே சாலைகள் கிட்டத்தட்ட ஓட்டுனரோடு பேசிக்கொண்டே வருவது போல் வழி நெடுகிலும் விதம் விதமாக போக்குவரத்து குறியீடுகள். பல நமக்கு பரிச்சயம் அற்றவை. நிறைய காணப்படும் ஒன்று “நிறுத்து” STOP குறியீடு. இது கிளை வழியிலிருந்து பொது வழி சேரும் எல்லா சாலை முனைகளிலும் இருக்கிறது இது இருந்தால் ஒரு நொடி வண்டியை நிறுத்தி ஆகவேண்டும். பெரிய சாலைகளில் வேகத்திற்கு வரம்புகள் உண்டு. வேகம் வரம்பு மீறினால் மட்டுமில்லை, வரம்புக்கு குறைவாக இருந்தாலும் குற்றமாம். இந்தச் சாலைகளுக்கு பெயர்கள் இருந்தாலும் சில எண் வரிசையும் உண்டு..

அவைகள் துவங்கும் முன்னரே பலகைகள் அவற்றின் எண்ணை அறிவித்து விடும். எங்கு திரும்ப வேண்டும் , எங்கு காத்திருக்க வேண்டும், எங்கு தடையின்றி செல்லலாம் என அனைத்திற்கும் சாலைகளில் அறிவிப்புகள் இருக்கின்றன. செல்லும் வழி திருப்பத்தை தவறி விட்டுவிட்டால் நம் ஊர் போல் பின்னோக்கி வரவோ யூ டர்ன் எடுக்கவோ அனுமதி இல்லை எத்தனை மைல்கள் என்றாலும் நேராகச் சென்று, அதற்கென்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே திருப்ப முடியும். இதற்காகவே வழி தெரிந்தாலும் கூகிள் மேப் திறந்து வைத்து கொள்கிறார்கள். திருப்பத்தை அது அறிவித்து விடும் என்று. பள்ளிபேருந்து, ஆம்புலன்ஸ், போலீஸ் கார் போன்றவைக்கு முதல் உரிமை .

பள்ளிப் பேருந்துக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அருமையானது. அவற்றின் அருகில் பிற கார்கள் நிற்க கூடாது. பிள்ளைகள் இறங்கி அந்த பேருந்து நகரும் வரை பின்னுள்ள வண்டிகள் நகரக் கூடாது. மீறினால் அபராதம், 5 ஆண்டு சிறை. போக்குவரத்து சட்டங்கள் கடுமையானவை. பள்ளி வளாகம் அருகில் வேக வரம்பு மிகவும் குறைவு. இங்கே கிலோமீட்டர் கணக்கு இல்லை மைல் கணக்கு தான் அந்த வகையில் 65 மைல் என்றால் 100 கிமீ க்கு மேலே.. அதனால் முன் செல்லும் வாகனத்திற்கும் நமக்கும் இடையே குறைந்தது 10-20 மீட்டர் இடைவெளி அவசியம். இதில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக வலப்புறம் வந்து வழி விட வேண்டும்.

போலீஸ் கார் நம் அருகே வந்தாலோ நம் பின்னே வந்து சைரன் அடித்தாலோ உடனடியாக வலப்புற சாலையோரம் நிறுத்தி விட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் வாகனத்தை விட்டு இறங்க கூடாது. கைகள் ஸ்டீயரிங் வீல் விட்டு அகலாமல் அவர்கள் நம்மை அணுக காத்திருக்க வேண்டும். இதில் எது மீறினாலும் நம்மை சுட்டுக் கொல்ல அவர்களுக்கு முழு அனுமதி உண்டு. இங்கே துப்பாக்கிகள் சல்லிசாக கிடைப்பதால் போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ள இந்த ஏற்பாடு. பொறுமையாக இருந்து அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்லி பணிவாக அகன்று விடுதல் நலம். கேட்டால் தவிர கைகளை இடம் விட்டு அகற்ற கூடாது .

இன்று இதோடு முடித்துக் கொள்கிறேன். நாளை எது பற்றி எழுதலாம் என்று கமென்ட் செய்யவும் . (end)

🙏

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)