அலுவலக நேர்காணல்

 நண்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் பார்க்க போவது அலுவலக நேர்காணலுக்கான சில குறிப்புகள்.

வழக்கம்போல் இந்த இழையில் நான் சொல்லும் அத்தனை கருத்துகளும் பார்த்த கேட்ட அனுபவித்த விஷயங்கள்தான். நான் இதுவரை பங்கேற்ற எந்த நேர்காணலிலும் தோல்வியுற்றது இல்லை. அதில் பெரிய பெருமை எல்லாம் இல்லை. சில அடிப்படை விஷயங்கள் கடைபிடித்தால் யாருக்கும் இது சாத்தியமே.

நான் சொல்வது பெரும்பாலும் ஐடி கார்பரேட், பிரைவேட் நிறுவனங்களின் வெள்ளை காலர் வேலைகளுக்கு பொருந்தும்..

முதலில் விண்ணப்பித்தல்.

 மற்றவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ நம் தகுதி நமக்கு தெரிய வேண்டும். விண்ணப்பிக்கும் வேலைக்கான தேவைகளுக்கு நாம் பொருந்துவோமா என்ற சுய மதிப்பீடு அவசியம். படிப்பு மட்டுமின்றி நம் அனுபவம், இதுவரை பார்த்து வந்த வேலை இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். படிப்பிற்கும் அனுபவத்திற்கும் மீறிய பதவிக்கு விண்ணப்பித்தால் கையோடு நிராகரிக்கபடும். ஒரு வேளை நேர்காணலுக்கு அழைத்து விட்டாலும் பிறகு அது தோல்வியில் முடியும்.

அடுத்து ஆங்கிலம். என்னதான் அது வெறும் மொழி என்று வாதிட்டாலும் துரதிர்ஷ்டவசமாக இன்றளவும் அறிவின் அளவு கோலாக பெரும்பாலான நிறுவனங்களில் ஆங்கில புலமை பார்க்கப் படுகிறது. இதற்கு சற்று மெனக்கெட வேண்டும்.

மனித மூளை பெரும் ஆற்றல் வாய்ந்தது. வழியற்று நிற்கும் போதும், பெரும் அழுத்ததிலும் தன் பொதுவான எல்லைகளை எளிதில் தாண்டி எதையும் சாதிக்க வல்லது.

நான் கர்நாடகா வங்கியில் பணி புரிந்த போது. சேர்ந்த புதிதில் அங்கு இருந்த மேலாளர் முதல் பியூன் வரை என் எந்த ஆங்கில கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். நான் ஜூனியர் என்பதால் ராகிங். தவித்து பிறகு அதை கன்னட மொழியில்அறிந்து அதே கேள்வியை மீண்டும் கேட்க வேண்டும். நம்ப மாட்டீர்கள்! இருபதே நாட்களில் திக்கி திணறி கன்னடம் பேச கற்றுக் கொண்டேன். மூன்றே மாதங்களில் சரளமாக பேச வந்தது. ஒரு புதிய மொழியை இவ்வளவு விரைவில் கற்க முடியும் என்றால் ஏற்கனவே தெரிந்த ஆங்கிலம் எம்மாத்திரம்.

நான் படித்தது சென்னையில் ஆங்கில வழி கல்வி. எழுத படிக்க நன்கு தெரிந்த போதும் சரளமாக பேச பெரும் தயக்கம் இருந்தது. என் தோழி அறிவுரையின் படி ஆங்கில நாவல்கள் வாசிக்க தொடங்கினேன். அதுவரை தமிழ் எழுத்தாளர்களை மட்டுமே ரசித்திருந்த நான் ஆங்கிலம் படிக்க தொடங்கியது அப்படிதான்.

கையில் அகராதி வைத்து (ஸ்மார்ட் போன்கள் அவ்வளவு இல்லாத காலம்) பொருள் உணர்ந்து படிப்பேன். திகில் நாவல்கள் படிப்பது சிறப்பு. அப்போது தான் முடிவு தெரிந்து கொள்ளவேனும் விடாது படிப்போம். சிட்னி ஷெல்டன், ஹாரி பாட்டர் எழுதிய ஜே கே ரௌலிங் போன்றோரின் கதைகள் பெரிதும் உதவின.

அடுத்தது ரெஸ்யூம் எனப்படும் சுய குறிப்பு. இதில் முடிந்தவரை சுருக்கமாக விவரங்கள் இருக்கட்டும். அப்போதுதான் நேர்காணலில் அவற்றை விவரித்து சொல்ல முடியும்.

சரி அடிப்படை விஷயங்கள் பார்த்து விட்டோம் இனி நேரடி குறிப்புகள்.

செய்யும் வேலை பற்றிய சமீபத்திய மேம்பாடு என்ன என்று அறிந்து கொள்ளுங்கள். உங்கள் துறையில் புதிதாக என்ன சேர்ந்து இருந்தாலும் தெளிவாக அது பற்றி படித்து வையுங்கள்.

செல்லும் நிறுவனம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பெரும்பாலும் முதல் கேள்வியே எங்கள் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்பதாக தான் இருக்கும்.

அடுத்து வரும் முக்கிய கேள்வி. உங்களை பற்றி சொல்லுங்கள் என்பது. நாம் நம்முடைய சுய குறிப்புகள் அவர்களிடம் கொடுத்து இருப்போம், இருந்தும் இந்த கேள்வி நிச்சயம் வரும். இதற்கு முடிந்தவரை மேலோட்டமாக சொந்த விவரம் கூறுவது நல்லது. பெயர், மொத்த அனுபவம், திருமணம் ஆகிவிட்டதா, சொந்த ஊர் போன்றவை. தற்பெருமையாய் தோன்றும்படி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து உடை

இலகுவான இறுக்கி பிடிக்காத உடை அணியுங்கள். உடை உடலை இறுக்கினால் தெளிவாக சிந்திக்க இடையூறாக இருக்கும். அழகை அதிகரித்து காட்டும் உடைகளை விட மதிப்பு கூட்டும் பகட்டு இல்லாத உடைகள் அணியுங்கள். சிறிதேனும் பளிச் என்று இருக்கும் படி செல்லுங்கள். பெண்கள் உறுத்தாத உதட்டு சாயம்.. அலட்டாத தலை அலங்காரம். மரியாதை தரும் உடைகள் அணிவது நல்லது. ஆண்களுக்கும் அதுவே. ஃபார்மல் ஷர்ட் பேண்ட். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட ஷூ. மதிப்பாக காட்டும் வாட்ச் மெலிதான பாடி ஸ்ப்ரே போன்றவை அணியலாம். கவனம் ஈர்க்கும் பெரிய அணிகலன்கள் தவிர்ப்பது நல்லது.

உணவு : செல்லும் முன் சிறிதேனும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பசித்த வயிறு சிந்திக்க தடை செய்யும். முகத்தில் வாட்டம் தரும்.

நேர மேலாண்மை

அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். முடிந்த வரை குறிப்பிட்ட நேரத்திற்கு 5-10 நிமிடங்கள் முன்னதாக சென்றால் நமக்கு  இறுக்கம் இல்லாமல் இலகுவாக இருக்கும். பரீட்சை போல கடைசி நேர பதட்டங்கள் இல்லாமல் அமைதியாக இருக்க உதவும். முக்கியமாக, காத்திருக்கும் நேரத்தில் மொபைலில் சமூக வலை தளம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது கவன சிதறலுக்கு காரணமாகலாம். அருகில் இருப்பவர்கள், வரவேற்பாளர், செக்யூரிட்டி முதலானோரிடம் புன்னகைத்து பேசுங்கள். அரட்டைகள் அற்ற அத்தியாவசிய பேச்சு மட்டும்.

கை குலுக்குதல்:

உள்ளே நுழைந்ததும் அறிமுகம் முடிந்த பின் தன்னம்பிக்கையுடன் கை நீட்டி கை குலுக்குங்கள். இந்த நேர்காணல் அவர்கள் உங்களை மதிப்பிட மட்டுமல்ல நீங்கள் அந்த நிறுவனம் உங்களுக்கு சரியா என்று தேர்ந்து எடுக்கவும் தான் என்பதை மறக்க வேண்டாம். எதையும் வெற்றி கொள்ள இந்த மன நிலை மிக முக்கியம்.

கேள்வி பதில்

எந்த கேள்வி கேட்டாலும் பதில் தெளிவாக  சுருக்கமாக சொல்லுங்கள். உங்கள் பதிலில் இருக்கும் எதோ ஒன்று அவர்கள் அடுத்து விவரம் கேட்கும் படி அல்லது அடுத்த கேள்விக்கு வித்தாக அமைய வேண்டும். உதாரணமாக வெளிநாட்டு வாடிக்கையாளர் களிடம் பேச இயலுமா என்று கேட்டால், முடியும் முன்பு டெலி மார்கெட்டிங்கில் பழக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும். அடுத்த கேள்வி, அதை பற்றி நகரும்.. சற்று முயன்றால் நம்மிடம் அவர்கள் என்ன கேட்க வேண்டும் என்பதை நாம் நகர்த்த முடியும்.

தெரியாத கேள்விக்கு மன்னிக்கவும் அது தெரியாது என்று உண்மை சொல்வது நல்லது. தெரியும் என்று சொல்லி பிறகு தொடரும் கேள்விகள் தெரியாவிட்டால் நம்பகத்தன்மை கெட்டு விடும். இங்கு எதிர்பார்ப்பது திறமை அறிவை விட தன்னம்பிக்கையும், நம்பகத்தன்மையும்தான்.

அடுத்து கேட்கப்படும் முக்கிய கேள்வி ஏன் பழைய வேலை விடுகிறீர்கள் என்பது தான். இதற்கு முடிந்த வரை இரண்டு விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஒன்று அந்த நிறுவனம் சரி இல்லை என்று குறை கூறுவது, இரண்டு அதை விட இங்கு பணம் அதிகம் என்று பகிரங்கமாக சொல்வது. பொதுவாக சந்தர்ப்ப சூழ்நிலை வளர்ச்சி குறைவு போன்ற மழுப்பலான பதில்கள் தான் இதற்கு சரி.

அடுத்தது வேலை நேரம். தேவைப்பட்டால் ஓவர் டைம் செய்வீர்களா, வேலை பளு அதிகம் இருந்தால் சமாளிப்பீர்களா போன்ற கேள்விகளுக்கு தயங்காமல் நிச்சயம் என்று பதில் சொல்லுங்கள். எந்த அளவு விட்டு கொடுப்போம் (flexibility) என்று அறிவதற்கான கேள்வி இது.

எதிர்பார்க்கும் ஊதியம் பற்றிய கேள்விக்கு எந்த அளவு சொல்வதாக இருந்தாலும் அது பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது (negotiable) என்று சேர்த்து சொல்லுங்கள். கூட குறைய பிறகு பேசலாம்.

இறுதியாக மிக முக்கிய தேவை, இந்த வேலை வந்தால் மகிழ்ச்சி இல்லை என்றால் மீண்டும் முயற்சிப்பேன் எதுவும் பெரிதில்லை என்னும் ஜாலி மனநிலை (கொஞ்சம் கஷ்டம்தான் முயன்றால் வரும்).

உண்மை விவரங்கள், தன்னம்பிக்கை மலர்ந்த முகம், பளிச் என்ற புன்னகை, தெளிவான பேச்சு இதெல்லாம் எவரையும் ஈர்க்கும், மதிப்பு ஈட்டும்.

நான் கடை பிடிக்கும் விஷயங்களை பகிர்ந்தேன். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்..

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)