தாங்க்ஸ் கிவிங்

 நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் மீண்டும் மின்னசொட்டா நடப்புகளுக்கு வருவதாய் இருக்கிறேன்.

கடந்த இரு வாரங்களில் குளிர் ஜீரோ வுக்கு கீழ் இறங்கி விட்டது. மைனஸ் குளிர் இப்போதெல்லாம் பழகி விட்டது. எங்கு சென்றாலும் முன்னதாக கிளம்ப வேண்டும் (ஆடைகள் அணிய தனியே நிறைய நேரமாகிறது) , பெரும் சுமை போல் கையுறை காலுறை, தலை குல்லா என்று முறையே ஐந்தடுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் உயிருக்கு உத்திரவாதமில்லை (குறைந்தபட்சம் என் வரையில்)
நகரம் இலையுதிர் கால அழகெல்லாம் இழந்து ஒருவித சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கிறது. மரங்கள் இலைகள் உதிர்ந்து வெற்றாய் இருக்கின்றன. இங்கு வந்த போது இருந்த வெயில் காலத்து பசுமையும் , இலையுதிர் காலத்தில் இருந்த வர்ண ஜாலங்களும் கண்டு நம்மூர் இப்படி இல்லையே என்ற ஆதங்கம் உள்ளூர இருந்தது. இப்படி பஞ்ச பூமி போல் அனைத்தும் வறண்டு போகும் நிலை பார்த்தால் எப்பொழுதும் சீராக இருக்கும் நம்மூர் வானிலை ஏக்கப்பட வைக்கிறது.
இதில் கடந்த வாரம் நல்ல பனி பொழிவு. முதல் முறை தெருவெங்கும் வீடுகளெங்கும் வெண் போர்வை போர்த்தி கொண்டு இரு தினங்கள் மிக உற்சாகமாக கழிந்தன..
கேக் மீது பூசும் வெண்ணெயை ஐசிங் என்று சொல்வதன் பெயர் காரணம் புரிந்தது. வீடுகள் மேல் வெள்ளை பனி போர்வை அது போலவே இருந்தது 🙂

பனி பொழிவு நான் ஏற்கனவே பார்த்தது தான் என்றாலும் பிள்ளைகளின் உற்சாகம் எவரையும் தொற்றிக்கொள்ளும். குளிரை பொருட்படுத்தாமல் வெளியே ஓடுவதும், தேங்காய் துருவல் போல் காட்சியளித்த பனியை கைகளில் எடுப்பதும்.. அது கை சூடுபட்டு நீராகும்போது ஆச்சர்யமாக பார்ப்பதும்.. நாமும் இந்த பருவத்திலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

பனி பொழிவு பார்க்க மிக அழகாக இருக்கும். ஆனால் நடைமுறை சிக்கல்கள் அதிகம். முதல் சிக்கல் நடப்பது. முதல் நாள் பனியில் ஒன்றுமில்லை. அடுத்த நாள் முதல் மிக கவனமாய் இருந்தும் வழுக்கியது. என்னை போல் சென்னை மழை சாலைகளுக்கே வழுக்கி விழும் சாதனையாளர்கள் பாடு கஷ்டம் தான். அதற்கென்று தனி காலணிகள் (பாதங்களில் பல் வைத்தது) வாங்க வேண்டும்.

அடுத்து.. நம் மேல் விழும் பனி அப்படியே இருப்பதில்லை நீராகி விடுகிறது (தற்போது வரை). மழையில் நனையும் அதே நிலை. அணியும் மேலாடை நீர் புகாதவாரு இருத்தல் அவசியம்…

அடுத்து.. முகப் பாதுகாப்பு. இது நாள் வரை உடல் போர்த்தி இருந்தது போக இப்போது கண்கள் மட்டும் தெரியும் முகமூடி அணிய தொடங்கி விட்டோம். இல்லாவிட்டால் முகம் மரத்து விடுகிறது.

அடுத்து வழுக்கும் வாகனங்கள். இந்த பனியில் வாகனங்கள் எளிதில் வழுக்கி விடுமாம். அதனால் விபத்துகள் தவிர்க்க சிறு சங்கிலிகள் பின்னலாக கட்டி சக்கரங்களை சுற்றுகின்றனர். பிடிப்பு இருப்பதற்காக. தவிர நகராட்சி ஊழியர்கள் பனி பொழிய பொழிய உடனுக்குடன் அப்புறப்படுத்துகின்றார்கள். என்ன நடை பாதையையும் அப்படி செய்தால் மக்கள் விழுவது குறையும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க அமெரிக்கர்கள் வருடா வருடம் நவம்பர் மாதத்தில் நாலாம் வியாழன் கொண்டாடும் குளிர் கால அறுவடை திருநாளான தாங்க்ஸ் கிவிங் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. தள்ளுபடி விற்பனைகள் அமளி துமளி பட்டுக்கொண்டிருக்கிறது. நம்மூர் போல் 20-30 சதவீதம் எல்லாம் இல்லை.. 50-60 சதவீதம் குறையும் மாபெரும் தள்ளுபடி. வீட்டு உபயோக பொருட்கள், குளிர் ஆடைகள், மின் சாதனங்கள், ஃபர்னிச்சர் என்று எதுவும் விலக்கில்லை..

பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை. கடைகளுக்கு செல்ல திட்டமிட்டபடி.. இந்த குளிரில் பண்டிகையா என்ற ஆச்சரியத்தோடு வரும் வாரத்தை எதிர் நோக்கி இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)