சில கருத்துகள்

 நண்பர்களுக்கு வணக்கம். இது வரை வெளிநாட்டில் வாழ துவங்கிய என் அனுபவங்கள் பற்றிய இழைகள் போட்டு வந்தேன். ஹாலோவீன் சென்ற பிறகு அடுத்து கிருத்துமஸ் வரை பெரிதாக நிகழ்வுகள் இல்லை ஆதலால் இந்த இழை பொதுவானது. இந்த வாரம் மின்னசோட்டா நடப்புகள் அல்ல. வேறு சில கருத்துகள்.

முழுக்க என்னுடைய சொந்த அனுபவங்கள் வைத்து என் புரிதலை உங்களோடு பகிர்கிறேன்.

குழந்தைகள்.. ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளை ஒவ்வொரு விதமாக வளர்க்கிறோம். இது சரி இது தவறு என நாம் பார்த்தவைகள் , நமை வளர்த்த விதம் கொண்டு இது மாறுபடும். தான் வளர்ந்த முறை பற்றி, தன் பெற்றோர் பற்றி பெருமதிப்பு வைத்திருப்போர் தான் வளர்ந்த விதத்திலேயே தன் குழந்தைகளை வளர்க்க நினைப்பதும். சிறு வயதில் துன்புற்று வளர்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக தன் பிள்ளைகளை வளர்ப்பதும் பொதுவான உளவியல். அவர்கள் வளர்ப்பில் இத்தனை யோசிக்கும் நாம் முக்கியமான ஒன்றை யோசிக்க மறுக்கிறோம் .

80’s 90’s கிட்ஸ் என்று பெருமைப்படும் நாம் நம் குழந்தைகளுக்கு அத்தகைய சூழல் தருகிறோமா? என்றேனும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் இருக்க விடுகிறோமா? நமக்கு வாய்த்த இயல்பான குழந்தை பருவம் அவர்களுக்கு வாய்க்க விடுகிறோமா? இப்போதிருக்கும் பெற்றோர் மனநிலை இரு விதமானது. அதீத செல்லம் அல்லது அதீத கண்டிப்பு.. இது இரண்டுக்கும் இடைப்பட்ட சம நிலையை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை. யாரும் சொல்லி தராமலேயே நம் பெற்றோர் அதில் வித்தகர்களாய் இருந்தனர். சொல்லி கற்பது விட அனுபவித்து கற்றல் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். அவர்களை நாம் அனுபவிக்க விட்டால் தானே.

இந்த அதீத செல்லம் தறும் பெற்றோர் பெரும்பாலும் சிறு வயதில் மிக கண்டிப்பாக வளர்ந்து அத்தகைய சூழ்நிலையை வெறுப்பவர்கள். தங்கள் பிள்ளை ஏமாற்றம் அடைவதை சற்றும் விரும்பாதவர்கள். ஏமாற்றம் என்பது எத்தகைய பெரும் பாடம் என்பதை உணராதவர்கள். சிறு சிறு ஏமாற்றங்கள் பிள்ளைகளை எவ்வளவு மன பலம் அடைய செய்யும் தெரியுமா. வாழ்க்கையில் எது வந்தாலும் நொந்து விடாமல் அடுத்து என்ன என்று எளிதாக கடக்க வைக்கும் தன் சோகம் உதறி பிறர் துன்பம் தீர்க்கும் ஒவ்வொரு கரமும் ஏமாற்றங்கள் சந்தித்து பழக்கபட்டதாய் மட்டுமே இருக்கும். ஏமாற்றம் தோல்வியை தாங்கும் இதயம் தரும். வலிமை தரும்.

காத்திருந்த பிறகு கிடைக்கும் பொருளின் அருமை எல்லை இல்லாதது. என் பிள்ளை நினைத்ததை நடத்துவேன் என்ற ஒரு மகிழ்ச்சிக்காக அவர்கள் எதிர்காலத்தில் எதன் மீதும் பெரிதாக மதிப்போ நன்றியோ வைக்காத மனநிலையை அவர்களுக்கு உருவாக்குகிறோம்.

அவர்கள் நம்மிடம் ஒன்று கேட்டு, இப்போது இல்லை சிறிது நாள் காத்திரு என்று சொல்லி பிறகு செய்து பாருங்கள். இருமுறை மும்முறை கேட்கட்டும் தவறில்லை.அப்படி கேட்டு கெஞ்சி பெறும் பொருளின் சுவாரஸ்யம் கூடும். பத்திரமாய் வைத்துக்கொள்ள துாண்டும். சிறுவயதில் கெஞ்சி காத்திருந்து பெற்ற சைக்கிள், கிரிக்கெட்பேட் எல்லாம் நினைத்து பாருங்கள்.

அடுத்தது தவறு செய்தால் திட்டுவது. திட்டினால் தப்பில்லை நண்பர்களே. கடும் சொற்கள் சில நேரம் அவசிய தேவைதான். உலகம் கடுமையானது. நம்மிடம் அதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பிறகு வெளி உலகில் வாங்கும் திட்டுகள் அவர்களை ஒன்றும் செய்யாது. சொல் பொறுக்காமல் வாழ்வை முடித்துக்கொள்ள துணியும் பதின் பருவ பிள்ளைகள் எத்தனை என்று யோசித்து பாருங்கள். அடி, திட்டு, அவமானம் , ஏமாற்றம் காத்திருத்தல் இது ஏதுமின்றி வளரும் பிள்ளைகள் எப்படி இந்த வன்மம் சூழ் சமுதாயத்தை எதிர் கொள்ளும்.

நம் பிள்ளைகள் இப்போதைய மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட அவர்களின் எதிர்கால மனநலம் தைரியம் முக்கியம். அதற்கென்று அவர்களை கொடுமை படுத்த சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நம் கண்டிப்பில் சிறிதளவாவது இவை கலந்திருக்கட்டும் என்கிறேன். தடுப்பூசி வழியே கிருமியை செலுத்தி நோய் எதிர்ப்பு வருவிப்பதை போல. பொத்தி பொத்தி வளர்க்கப்படும் சிறார்கள் கொழைகளாகிறார்கள்.

இப்போது மிகுந்த கண்டிப்போடு இராணுவ விதிகளோடு வளர்க்கும் பெற்றோர் பற்றி பார்ப்போம். யார் இந்த காலத்தில் அப்படி வளர்க்கிறார்கள் என்று கேட்கிறீர்களா.. நானே பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். குழந்தை வீடு வந்ததும் உண்ண கொடுத்து கிளாசுக்கு அனுப்பி 7 மணிக்கெல்லாம் இரவு உணவு தந்து 8 மணிக்கு உறங்கியே தீரவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கும் வீடுகளை நான் அறிவேன். வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் இந்த நிலை தான். சொந்த தாத்தா பாட்டி வந்தாலும் இந்த நிலை தான். பாவம் ஊரிலிருந்து வரும் முதியோர் ஒன்றும் சொல்ல முடியாமல் ஏக்கத்துடன் பார்த்து செல்வார்கள்.

கேட்டால் எதுவாயிருப்பினும் வீக்எண்ட் இருக்கில்ல. நாளைக்கு பள்ளி என்ற பதில் இருக்கும். இருந்தால் என்ன? ஒருநாள் விழித்து விளையாடினால் என்ன.நாம் இதை கடந்து வந்ததில்லையா? நள்ளிரவு வரை விழித்து உறவினரிடம் அளவளாவி காலை அவசரமாய் எழுந்து பள்ளி சென்றதில்லையா? எவ்வளவு இனிய நாட்கள் அவை டிசிப்ளின் என்ற பெயரில் எதை எதை தடுக்கிறோம். இதில் இன்னொரு வகை இருக்கிறது. நான் பிள்ளைகளுக்கு மைதா தரமாட்டேன்.

என் பிள்ளைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதில்லை. நாங்கள் ஃபைபெர் பிஸ்கட்டுகள் மட்டுமே தான் வாங்குவது. மேகி எவ்வளவு கெடுதல் தெரியுமா. ஆர்கானிக் மட்டுமே நல்லது. விலை அதிகம் என்றாலும் அது தான் வாங்குவோம். என் மகன் பையில் எப்போதும் ஹேன்ட் சானிடைசர் இருக்கும். என்று பெருமையாக சொல்லும் பெற்றோர். இவர்கள் பெரும்பாலும் யூடியூப் வாட்ஸ்அப் செய்திகளை அப்படியே பின்பற்றும் கூகிள் என் குல தெய்வம் என்னும் வகையறாக்கள்.

நண்பன் ஒருவன் மகளுக்கு தடுப்பூசி போடுவதை கூட இதனால் தவிர்த்து வந்தான். பெரிய அளவில் இப்போது நடக்கும் மூளை சலவைகளின் விளைவு. பெரும் பாடுபட்டு அவனை சம்மதிக்க வைத்தோம். அதை விட கொடுமை வாக் மானிட்டர் வாங்கி பிள்ளைகள் கையில் கட்டுவது. சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. சர்க்கரை வியாதியா என்ன குழந்தைகளுக்கு.

எப்போதாவது மேகி சாப்பிட்டால் என்ன. சாலையில் இருக்கும் கரும்பு ஜுஸ் அப்படி என்ன இழிவு. கிரீம் கேக், பார்லி ஜீ பிஸ்கட் அவ்வளவு மோசமா? அளவோடு அதை உண்டு பார்க்கட்டுமே. இப்படி கட்டுபடுத்தியே அவர்களை எதையும் எதிர்ப்பவர்களாக அல்லது எதற்கும் அடங்கியே பழகுபவர்களாக நாமே மாற்றுகிறோம்.

மழையில் நனைவது, வீட்டு பாடம் செய்யாமல் பள்ளியில் திட்டு வாங்குவது, இரவு விழிப்பது, காலையில் எழ முடியாமல் 5 நிமிட நேரம் கேட்பது, எதிர்பார்த்து ஏமாறுவது, காத்திருந்து பெறுவது, சேர்த்து வைப்பது, பிடித்ததை உண்பது, கத்தி விளையாடுவது, பெரியவர்களுக்கு பயப்படுவது என்று

நாம் அனுபவித்து வாழ்ந்த நல்லதும் கெட்டதும் கலந்த இயல்பு வாழ்வை நம் பிள்ளைகளுக்கு தருவோம். அவர்கள் சிற்பங்கள் அல்ல நாம் செதுக்கி வளர்க்க. அவர்கள் பூக்கள்.. இடம் கொடுங்கள் தானாக மலரட்டும் (End)

🙏

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)