ஹாலோவீன்

 நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 2 வாரங்களில் இரு வேறு பண்டிகைகள் இங்கு கொண்டாடப்பட்டது. முதலாவதாக நாமெல்லோரும் கொண்டாடிய தீபாவளி. அதை தொடர்ந்து மாத இறுதி நாளில் அமெரிக்க பண்டிகையான ஹாலோவீன் (அமானுஷ்யங்கள்) இவ்விரு பண்டிகைகள் சென்ற விதம் பற்றியது இன்றைய இழை. (1)

தீபாவளி ஆயத்தங்கள் பற்றி விரிவாக முன்பே விவரித்திருந்தேன்.அவ்விதமே செவ்வனே சென்றது.மனதில் ஆழ்துளையில் இறந்து விட்ட பிள்ளை பற்றிய வருத்தம் இருந்ததால் பெரிதாக கொண்டாட பிடிக்கவில்லை. குழந்தைகளுக்காக பட்டாசுகளுக்கு அனுமதி பெற்றிருந்த நண்பர் வீட்டிற்க்கு சென்று கூட்டமாக வெடித்தோம்

தீபாவளி களைப்பு தீருவதற்குள் ஹாலோவீன் வருகிறது என்றார்கள். ஹாலோவீன் என்றால் என்னவென்று புத்தகங்களில் படித்து மட்டுமே தெரியும். அதுவும் அரைகுறை உலகில் உள்ள அமானுஷ்யங்கள் அனைத்தையும் கொண்டாடும் பண்டிகை இது. இங்கு அதிக முக்கியத்துவத்தை பெற்று கொண்டாடப்படுகிறது. அதுவும் குழந்தைகள் மிக விரும்பி எதிர்பார்க்கும் பண்டிகை.

சரி எதோ நாம் தீபாவளி கொண்டாடியது போல் இது அவர்கள் கொண்டாடுவது. நாம் சந்தோசமாக வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தால், பள்ளி முழுக்க இது பற்றி தான் பேச்சு. நாமும் கொண்டாட வேண்டும் என்று வந்து நின்றாள் மூத்த மகள். அவள் பின்னாடியே சின்னதும் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியாது.

எப்படி கொண்டாட வேண்டும் என்றும் தெரியாது நமக்கெதற்கு இதெல்லாம் என்றால் காதிலேயே விழவில்லை. எங்களுக்கு எதாவது காஸ்ட்யூம் போட்டு விடு நாங்கள் டிரிக் ஆர் டிரீட் போக வேண்டும் என்றாள்.டிரிக் ஆர் டிரீட் என்றால் இப்படி எதாவது வேஷம் போட்டுக்கொண்டு வீடுகளின் கதவு தட்டி இனிப்புகள் தருகிறாயா இல்லை மாய வித்தைகள் காட்டவா என்று (விளையாட்டாக தான்) குழந்தைகள் கேட்பார்கள்.. அவர்களுக்கு கைநிறைய இனிப்பு தந்து வாழ்த்து கூறுவார்கள்.

இது பற்றி பள்ளியில் மற்ற பிள்ளைகள் பேசவும் இவர்களுக்கு ஆர்வமாகி விட்டது. போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து பிள்ளைகளும் (இந்தியக் குழந்தைகள் தான்) இதையே பேசவும் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் விவரம் கேட்டேன். அவர் அறிவுரைப்படி கடைசி நிமிடத்தில் அவசரமாக கிடைத்ததை வாங்கிக் கொண்டு வந்து ஹாலோவீன் பண்டிகைக்கு தயாரானோம்.

இவ்வளவுக்கும் பள்ளிக்கு விடுமுறை எல்லாம் இல்லை. மாலையானதும் ஒரு நான்கு மணி அளவில் இவர்கள் இருவரையும் தயார் செய்து (ரத்த காட்டேரி வேஷம்) கையில் ஒரு பம்கின் பக்கெட் தந்து அங்கே தயார் நிலையில் இருந்த பிறருடன் இணைந்தோம். கிட்டத்தட்ட 30-40 குழந்தைகள் 1 முதல் 14 வயதிற்குள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடையில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. துணைக்கு அவர்களின் தாய்மார்கள் வேறு. கூட்டத்தை பார்த்து நான் மயங்காத குறை தான்.

நானறிந்த வரையில் நான்கைந்து குழந்தைகள் சேர்ந்து செல்லும். இங்கிருக்கும் கூட்டம் கண்டால் யாருக்கும் இனிப்பு தந்து கட்டுபடி ஆகும் என்றே தோன்றவில்லை. குழப்பமாகவே கூட நடந்தேன். புதிது என்பதால் பலரை தெரியவில்லை நிச்சயம் அமெரிக்கர்கள் இந்த கூட்டம் கண்டு மிரள போகிறார்கள் என்று நினைத்திருக்க, இனிய திருப்பமாக ஒவ்வொரு பெற்றோரும் அனைத்து பிள்ளைகளையும் தத்தமது வீடுகளுக்கே அழைத்து சென்றனர்.

இவ்வளவு பிள்ளைகள் என்று முன்பே தெரிந்து இருந்ததால் நிறையவே இனிப்புகள் வாங்கி வைத்து கை நிறைய தந்து பிள்ளைகளை மகிழ்ச்சியில் குதிக்க செய்தனர். விவரம் கேட்ட போது, நம்மவர்கள் அதிகம் இருப்பதால் இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் குடியிருப்பில் இருக்கும் அமெரிக்கர்களை தொந்திரவு செய்யாமல் அதே நேரம் பிள்ளைகள் ஏமாற கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்று சொன்னார்கள்.

அடடா நம் வீட்டில் ஒன்றும் வாங்கி வைக்கவில்லையே வந்து நிற்கும் போது கையை விரிக்க வேண்டுமா என்று கலங்கி இருந்த போது ஆபத்பாந்தவன் போல் பெரிய சாக்லேட் பை நிறைய வாங்கி வைத்திருந்தார் திரு ராம்குமார். அலுவலகத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வழியாக அலைந்து முடித்து வீடு வந்தால் இன்னும்

முடியவில்லை.இந்த ஊரில் இருக்கும் ( சிறிய அளவில்) மால் இல் கொண்டாட்டங்கள் காண செல்லலாம் என்று கிளம்பினோம்.

அங்கே சென்றால் நம் ஊர் ரங்க நாதன் தெரு போல கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வித விதமாக உடையணிந்து திரிந்து கொண்டிருந்தனர். சூப்பர் மேன் , ஸ்பைடர்மேன்,சூனியக்காரி, ஜாம்பி,தேவதைகள், டினோசர்கள், ஓநாய்கள் ஆட்டுகுட்டிகள் என்று பலவிதம். மாலில் உள்ள கடைகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு இனிப்பு தருகிறார்கள். இனிய சந்திப்பாக இவ்வூர் போலீஸ் காரர்கள் அங்கு வந்திருந்து இனிப்புகள் தந்து பிள்ளைகள் கூட செல்ஃபி எடுத்துக்கொண்டனர் .

ஒருவழியாக சுற்றி பார்த்து அலுத்து களைத்து ஆளுக்கு ஒரு கிலோ சாக்கிலேட்டுகளோடு வீட்டிற்க்கு வந்தோம். முற்றிலும் புதிய அனுபவம் இந்த ஹாலோவீன். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உணர வைத்த பண்டிகை. இதோடு இன்று நிறுத்தி கொள்கிறேன். அடுத்து என்ன எழுதலாம் என்று கமென்ட் செய்யவும்

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)