அமெரிக்கா புதிது

 சமீபத்தில் நான் அயல்நாட்டு வாசியாக ஆனேன்.பொதுவில் அமெரிக்கா பற்றி நம் ஊரில் நாம் வைத்திருக்கும் சாமானிய கருத்துகளோடு இங்கு வந்தேன்.. இங்கு வந்த பிறகு நான் கவனித்த எனை வியக்க வெறுக்க வைத்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த திரி..

அயல் நாடு எனக்கு புதிது அமெரிக்கா புதிது..(1) 

நான் பல ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து சென்று வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் பெரிதாக இதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது என்று நினைத்திருந்தேன்.. நிஜம் வேறு.முதலில் இங்கிலாந்து பல வகைகளில் நம் நாட்டை நினைவு படுத்தும். சாலைகள், இடப்புறம் நோக்கிய போக்கு வரத்து. (2)

 மக்கள் கூட்டம் , மெட்ரோ டிரெயின், பப்ளிக் பஸ் வசதிகள், கடைகள், நுகர்வோர் பொருட்கள், மெட்ரிக் சிஸ்டம் எனப்படும் கிலோ, கிராம் , சென்டிமீட்டர் எல்லாம் இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள்.. அமெரிக்காவில் இது அனைத்தும் பிடிவாதமாக நேர்மார்.. (3) 

நம் ஊரில் மின் விசை கீழ் அழுத்தினால் on என்று அர்த்தம் அல்லவா இங்கே மேல் நோக்கினால் on. இங்கு சாலைகள் வலப்புற போக்குவரத்து கொண்டவை என்று தெரியும் ஆனால் அதற்கு பழகுவது இவ்வளவு சிரமம் என்று தெரியாது. இங்கு கார் ஓட்டுவதில் நன்மை ஒன்று என்னவெனில் நம் ஊர் போல் மக்கள் நெரிசல் இல்லை(4) 

மேலும் 90 விழுக்காடு ஆட்டோ கியர்.. என் போன்றோர் எளிதாக பழக.. ஆனால் வலப்புறம் இடப்புறம் குழப்பம் தீரும் வரை வண்டி ஓட்ட முடியாது.. 
அடுத்தது விலைவாசி.. இங்கு செய்யும் செலவை நம் ரூபாய்க்கு மாற்றி யோசிக்க கூடாது எனினும் தரமான எந்த பொருளாக இருப்பினும் (5) 

இந்த ஊர் நிலைப்படி கூட உணவுப்பொருள் விலை அதிகம்தான்.. ஜங்க் புட் எனப்படும் பர்கர் போன்றவை எளிதாக கிடைத்தாலும் நல்ல காய்கறிகள், ஆர்கானிக் பால், முட்டை, நம் ஊர் மளிகை எல்லாமே மிக அதிக விலை. பெரும்பாலான மக்கள் இறைச்சி உணவை எடுத்துக்கொள்வதால் அதிக வகை காய்கறிகள் இல்லை (6) 

பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை விலையில் பெரிய அளவில் மட்டுமே கிடைக்கிறது.. ஒரு மாதத்திற்கு வேண்டிய அளவாக இருப்பதில்லை.. குறைந்தது மூனறு மாதம் வருமளவு பெரிய பாக்கெட்டுகள் தான் (7) 

80 – 90 களில் இங்கு வந்து செட்டில் ஆன இந்தியர்களுக்கு இருந்த சிரமங்கள் இப்போது இல்லை.. பெருமளவு நம் ஊர் பொருட்கள் மிக்சி கிரைண்டர் போன்றவை கிடைக்கிறது என்றாலும் அவற்றிற்கு தரும் விலை மிரள வைக்கிறது.(8) 

போதும் நிறைய குறைகள் சொல்லி விட்டேன்.. இப்போது கண்ணில் இதுவரை பட்ட நிறைகளை சொல்கிறேன்.. இங்கு நம் ஊரில் நாம் வெளிநாட்டினரை பார்ப்பதுபோல் வித்தியாசமாக நம்மை பார்ப்பதில்லை.. இங்கு பல தேசத்து மக்கள் கலந்திருப்பதால் அவர்களுக்கு பழகி விட்டது.(9) 

அரசு இயந்திரம் உண்மையிலேயே தடையற்று மிகச் சிறப்பாக இயங்குகிறது. அரசு ஊழியர்கள் மக்களை (யாராய் இருந்தாலும்) மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர்.. குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்றால் அந்த வேலை எக்காரணம் கொண்டும் தாமதிக்காமல் முடிக்க படுகிறது.(10) 

மக்கள் விதிகளை பெரும்பாலும் மீறுவதில்லை. மேலும் அறியாதவர்கள் என்றாலும் நம்மை பார்த்தால் புன்னகைக்கிறார்கள். GPS எனப்படும் கூகிள் வழிகாட்டி இங்கு பைபிள் போல் பயன்படுகின்றது. எந்த வேலையையும் தானே செய்து கொள்ளும் மன நிலை நிலவுகிறது. அதற்கு வசதியாக உபகரணங்கள் கிடைக்கின்றன (11)

 வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது, சிறு சிறு பழுது பார்ப்பது போன்ற வேலைகள் ஆள் வைத்து பார்த்தால் மிக அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதால்.. பெரும்பாலும் பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தி பழுதானால் எறிந்துவிட்டு வேறு வாங்கும் தரத்திலேயே இருக்கின்றன.(12) 

நேரத்திற்கு முக்கியத்துவம் அதிகம்.. எந்த பதவியில் இருந்தாலும் ஊதியம் மணிக்கணக்கில், அதாவது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்றே கணக்கிட படுகிறது. நாள் கணக்கில் அல்ல. இதனாலேயே தன் நேரம் மட்டுமின்றி அடுத்தவர் நேரத்திற்கும் மதிப்பு தரும் இயல்பு இருக்கிறதோ என்னவோ.(13) 

எங்கும் எதற்கும் முன்கூட்டி அனுமதி பெற்றே செல்லவேண்டி இருக்கிறது. இதில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நம் கதி அவ்வளவு தான். நம் ஊர் போல் அவசர சிகிச்சை பிரிவு எளிதாக செல்லக்கூடியது இல்லை. அதற்கு காப்பீட்டு திட்டம் இடம் கொடுப்பதில்லை. என் மகள் கை உடைந்து மிகவும் தவித்து போனோம் (14) 

இதில் காப்பீடு திட்டம் இல்லாவிட்டால் தலை சுற்றி போகும் அளவுக்கு மருத்துவ கட்டணம் இருக்கும். தலைவலி காய்ச்சல் , வயிறு சரியில்லை என்று அடிக்கொருதரம் மருத்துவமனைக்கு நம்மூர் போல் ஓட முடியாது.. மருந்து கடைகளில் மருந்து சீட்டு இன்றி தானே வாங்கி கொள்ளும் மருந்துகள் கிடைக்கின்றன (15) 

அடுத்தது கிளைமேட்.. சென்னை யின் வெயில் மட்டுமே பார்த்த எனக்கு இந்த பருவ நிலை மிக பிடித்து இருந்தது.. இப்போது இலையுதிர் கால தொடக்கம் பசுமை மாறி நகரம் முழுதும் ஆரஞ்சு மஞ்சள் என வண்ணம் மாறிக்கொண்டு வருகிறது.. கண்ணுக்கு அழகாய் இருந்தாலும் குளிர் தொடங்கி விட்டது. (16) 

போகப்போக மிகக் கடும் குளிர் வாட்ட போகின்றது என்று கேள்வி படுகிறேன். நான் இருப்பது கனடாவை ஒட்டிய அமெரிக்கா வின் வடக்கு பகுதி. இனி எப்படி இருக்கும் என ஆர்வமும் சிறு கலக்கமும் கலந்த மனநிலையில் இருக்கின்றேன். (End) 

இனி என் பார்வை யில் அமெரிக்கா பற்றிய கருத்துகளை இந்த டேக் போட்டு எழுத இருக்கிறேன் 🙏

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)